13

“ஏன் நிக்கறே? உக்காந்துக்கறது தானே”. . .

“ ஸ்டீல்ல தட்டு மாதிரி போட்டிருக்கே. சுடுதும்மா. மேலே ரூஃபிங்கே இல்ல பாத்தியா!. . . வெயில் வேற. . . சுள்ளுன்னு அடிக்குது.“

“ஏன் பஸ் வரலையா? வீட்லருந்து அப்பவே வந்துட்டியோ. . .“

“நீ வேற இந்த ஸ்டாப்பிங்ல பஸ் வரலன்னு காது கேட்காத வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான பஸ்ல ஏறிட்டேன். ஏறுன பிறகு தான் தெரிந்தது. ஏண்டா ஏறினோம்னு. . . ஒரு ஸ்டாப் போய்ட்டு இறங்கிட்டேன்.“

“ஏன்? என்னாச்சு? உங்களுக்குத்தான் முதியோருக்கான ஸீட் பஸ்ல முன் பக்கம் கவர்ன்மெண்ட் கொடுத்திருக்கே . . . “
அம்மாவின் முகம் மாறியதைப் பார்த்த மல்லிகா அம்மாவின் தோளை ஆதரவுடன் பற்றினாள்.

“என்னம்மா. . . என்னாச்சு?“

“ஒண்ணுமில்லம்மா! வரவர பெத்தவங்க வளர்ப்பு சரியில்லையோன்னு தோணுதும்மா!“
“ஏம்மா?“ நல்லா படிக்குற, ஒழுக்கமான குழந்தைகள் இல்லையாம்மா?
கனத்த மௌனம் அம்மாவிடம் இருந்து புறப்பட்டது.

“கொஞ்ச நேரம் அந்த பார்க்ல உக்காந்துக்கலாம் வர்றியா?“

தூரத்தில் தெரிந்த சாவு ஊர்வலத்தைப் பார்த்தாள் அம்மா. காருக்குள் இறந்தபெண்ணின் அருகில் ஒருவன் அவள் காதருகில் அழுதபடி அவன் பேசுவதை உற்றுப்பார்த்தாள். செத்தபிறகு பிணத்திற்கு எல்லாஉணர்வும் கேக்கும்னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். உணர்வுபூர்வமாக இன்றுதான் பார்க்கிறேன்…………….

அம்மாவின் மனமறிந்தாள் மல்லிகா.

இடத்தை விட்டுப்போய்விடவேண்டும் என நினைத்தாள்.
“சரி! வாங்க பேசிட்டே போகலாம். . .“

நேற்று நான் காந்தி இறந்தப்ப போட்ட டிரஸ்ஸைப் பாத்தேன்.
பல தடவை பாத்துட்டேன். இருந்தும் அதைப் பாக்கும்போது பழைய ஞாபகம் வருது. வருஷம் பல மாறினாலும் ஒண்ணு தெளிவாத் தெரியுது. அங்க இருந்தவங்கள்ள நம்ம இந்தியர்களை விட வெளிநாட்டவர்கள் தான் அதிகம். உனக்குப் புரியுதா என் வேதனை… அங்கேயே இருந்துடலாமோன்னு தோணுச்சு…….

அம்மா நீங்க அதிகம் பேச வேண்டாம். அப்பா நாட்டுக்காக வாழ்ந்து உயிரை விட்டார். கவர்மெண்ட் தர எந்த சலுகையும் வேண்டாம்னு சொல்லிட்டீங்க….நாளைக்கு அப்பா இறந்தநாள் ஜனவரி 26. கொஞ்சநேரம் ஃபிரெண்ட்ஸைப் பாத்துட்டு வரேன்னு கிளம்பினீங்க…உங்களுக்குப் பிடிச்ச லைப்ரரிக்குப் போலாமா……

ஒண்ணும் வேண்டாம் வீட்ல தேவைப்பட்டது கிடக்கு. நீ போய் பால் மட்டும் வாங்கி வா..

தாய்போல மரத்தின் நிழல் சிமெண்ட்பெஞ்சைத் தடவியிருந்த இடத்தில் மஞ்சள் நிறக் கொன்றைமலர்கள் சிதறியிருந்ததை இரசித்தபடி சிவகாமி அமர்ந்தாள்.

அம்மாவுக்கெனச் சூடாகப் பால் வாங்க அருகில் இருந்த ஆவின் பூத்திற்குச் சென்றாள் மல்லிகா.

எதிர் பெஞ்சில் கண் தெரியாமல் அமர்ந்திருந்த சிறுவனைப் பார்த்தாள். அவனருகில் தட்டில் சாதத்துடன் நின்ற பெண்ணையும் பார்த்தாள். என்ன செய்கிறார்கள் எனப் பார்த்தபடி இருந்தாள் சிவகாமி.
சாதத்தை எடுத்துச் சிறுவனுக்கு ஊட்டுவாள் என எதிர்பார்த்திருந்த வேளையில், அந்தப் பெண் சிறுவனின் கையைச் சாதத்தில் வைத்துத் தொட்டுக்காட்டி, கையைப் பிடித்து வாயில் வைத்ததைச் சிவகாமி கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு நிமிடம் கண்ணை இமைக்க மறந்த சிவகாமி அடுத்து என்ன நடக்கும் என்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

சிறுவன் அம்மா கொடுத்த சாதத்தைப் பிசைந்து பொரியல் இருந்த இடத்தைத் தடவிச் சரியாகச் சாப்பிட்டு முடித்தான். கை கழுவ பக்கத்தில் வாட்டர் பாட்டிலைத் தடவினான்.

“அம்மா!“

“என்ன சிவா?“

“கை கழுவ தண்ணிம்மா!“

“உனக்கு இடது கைப்பக்கமா நாலு அடி எடுத்து வை. . . வாஷ் பேசின் இருக்கு. . . பாத்துப் போ!“ என்றாள் அந்தத்தாய்.

“இந்தாங்கம்மா பால்!“ என்றாள் மல்லிகா.

வாயில் விரலை வைச்சு சிவகாமி, “உஷ்!. . . “ என்றாள் அந்தச் சிறுவனைச் சுட்டிக்காட்டியபடி.
“சிவா, இந்தாப்பா. . .“ என கூறியபடி அவன் தோளைத்தட்டி ஸ்டிக்கை அம்மா கொடுத்தாள்.

சிவா ஸ்டிக்கை வலப்பக்கமும் இடப்பக்கமுமாக மண்தரையில் மாற்றி மாற்றி தட்டிப் பார்த்து நடக்க ஆரம்பித்தான்.
திடீரென ஏதோ ஸ்டிக்கில் தட்டுப்பட. . . அப்படியே உட்கார்ந்தான்.
பச்சைப் புல்லின் மென்மையான வாசத்துடன் காலைப்பனியின் ஈரம் கையில் ‘ஜிலீர்‘ரென உரச, இலேசாகப் புன்னகைத்தான்.

“அம்மா. . . இதென்ன?. . .“

“இதுவா. . . பனியின் ஈரம். . .“ என்றவள் சட்டென நாக்கைக் கடித்தாள்.

“ஓ. . . உனக்குப் பனின்னா என்னன்னு தெரியாதே!“

“தெரியும்மா. . . எங்க மிஸ் சொல்லிக் கொடுத்திருக்காங்க. . .“

“சரி. . . பார்த்துப் போ. . .“

ஸ்டிக்கால் தரையைத் தட்டியபடி நின்றான்.

“அம்மா, இந்தக்கல்லு எல்லாருக்கும் இடைஞ்சலா. . . வழுவழுன்னு இருக்கேம்மா. . . “

“கூழாங்கல்லு தான் அது. . .“

“பார்க்கை டெக்கரேட் பண்ணிட்டு அப்படியே போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.“

“ஏம்மா அவங்களுக்குத் தன்னுணர்வு இல்லையா?“

“தன்னுணர்வா அப்படின்னா?“

“இது தெரியாதாம்மா உங்களுக்கு?“

“அடுத்தவங்க பார்க்கறாங்கன்னு நமக்குப் பெருமை வரணுமேங்கறதுக்காக எந்த நியாயமான செயல் செய்வதுபோல நடிக்கக்கூடாது. வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது. ரோட்டில் கிடக்கிற குப்பையை எடுத்துக் குப்பைத்தொட்டியில போடணும். . . குழியா கிடக்குன்னு ரோடே போடலைன்னு மறியல் செய்யறதை விட அந்தக்குழிய நிரப்ப பக்கத்துல கிடக்கிற மண்ணையோ, கல்லையோ போட்டுக் குழியை மூடலாம்ல. . . தெருவுல போறவங்களுக்கு நிழல் வேணும்னு மரம் நடணும்னு தோணனும். மரத்து மேலே லைட்டைப் போட்டு தன் கடைக்கு மட்டும் விளம்பரம் தேடுறது இல்லம்மா தன்னுணர்வு. சென்னையத் தவிர மத்த ஊர்ல ஒரு நாள்ல அரைநாளுக்கும் மேல கரண்ட் இல்லாம மக்கள் திண்டாடுறது தெரிஞ்சும் சீரியல் செட், ஆடம்பர லைட் போட்டு மின்சாரத்தை இஷ்டத்திற்கு செலவழிக்கிறதில்லை தன்னுணர்வு. இருக்கறத சிக்கனமா எல்லாரும் பயன்படுத்தணும். அது தான் மனிதத்தன்மை. இது தாம்மா தன்னுணர்வுன்னு எங்க மிஸ் சொன்னாங்கம்மா. . .“
வானத்திலிருந்து புஷ்பங்கள் தன் உடம்பில் கொட்டியது போல உணர்ந்தாள் சிவகாமி. “ரொம்ப கரெக்ட்“ எனக் கூறியவாறு கை தட்டிய சிவகாமியைப் பார்த்தாள் அந்தத்தாய்.

“உங்க பையனா?“

“ஆமா . . . லேட் மேரேஜ்ல பிறந்தான். டெலிவரி அப்ப நர்ஸோட கவனக்குறைவால ரெண்டு கண்ணும் தெரியாம போய்டுச்சு. . .“ அந்தக் குறை தெரியாம இருக்க அப்பப்ப இப்படி வருவேன். அவனுக்கு அப்பா இல்ல. . . ஆர்மில இருந்தார். திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். இருந்தும் அவன் கால்ல நிக்கணும்னு தான் இப்பிடி. . . அவனுக்கு இருக்கற மிஸ் ரொம்ப க்ரேட்டுங்க. . . எல்லாருக்கும் அப்படி வாய்க்கறதில்ல. . . என்றாள் சிவகாமி.
“பால் குடிக்கறீங்களா?. . . எதுக்கும் இருக்கட்டும்னு ஃப்ளாஸ்க்ல ஜஸ்ட் இப்பதான் வாங்கிக்கிட்டு நேரா வரேன்.
இரண்டு தம்ளர் பால் எக்ஸ்ட்ரா தான் வாங்கினேன்“ என்றாள் மல்லிகா.

“வேண்டாங்க. . . வெளில எங்கயும் சாப்பிடறதில்லே.“

“ஏன் பயமா?. . . ஏதாவது கலந்து இருப்பாங்களோன்னு. . .“

“சேச்சே. . . அதெல்லாமில்ல. . . டயட்ல இருக்கேன். இவன் ஒரு கால்ல நிக்கற வரைக்கும் நான் இருக்கணும்ல. . . காலம் போன காலத்துல பெத்து வச்சிருக்கேனே!.

“இந்த பையனுக்கு ஒரு குறையும் வராதும்மா. . .“
பெருமூச்செறிந்தபடி அம்மா பேச ஆரம்பித்தாள்.

“நான் இன்னைக்கு பஸ்ல போனேன்னு சொன்னேல்ல. . . கேளு மல்லிகா. . . நெஞ்சே ஆறலை. . . அங்க வயசான ஒரு பாட்டி என்னமாதிரின்னு வச்சுக்கோயேன். முதியோருக்கான சீட்ல உக்காந்துட்டாங்கம்மா! உடனே பக்கத்திலிருந்த பெண் ஐயய்யோ, எந்திருச்சுருங்க. . . இது அந்தப் பசங்க உட்கார்ற இடம்! வந்தா திட்டுங்க. . .“ என்றாள்.

“அப்ப பாத்து பக்கத்துல ஒரு லேடி பேக் மாட்டிட்டு நின்னுக்கிட்டு இருந்தாங்க. எங்கே போறாங்கன்னு தெரியல. . . நீங்க உக்காருங்கம்மா. . . பாத்துக்கலாம்“ னு சொன்னாங்க.

“பதிமூணு… பதினாலு… வயசு தாம்மா ஆகும் அவுங்களுக்கு. வாய் பேச முடியாத காதும் கேளாத பசங்கம்மா அவுங்க“.

அவங்களுக்குள்ளயே சைகைலேய பேசிட்டுக் கோபமாக கையைக் காட்டினாங்க.
அதப்பாத்தவுடன் அந்த வயசானஅம்மா எழுந்துட்டாங்க…..

“பேக் மாட்டின பொண்ணு உடனே, “நீங்க உட்காருங்க! போர்டுல என்ன போட்டிருக்கு? முதியோர்னு போட்டிருக்கா? அந்தக்குழந்தைகளுக்காகக் காலியா இருந்தாலும் நாங்க நிக்கறோம்.
வயசானவங்க அப்படி இல்லை இல்லையா?

“கடவுள் இவங்களைப் படைச்சதுக்கு வருத்தப்படறோம். ஆனா முதியோருக்கு மரியாதை தரணும்னு கூடத் தெரியலையேம்மா. . . “
குரல் வந்த திசையை நோக்கிச் சடாரெனத் திரும்பினாள் பேக் மாட்டிய பெண்.
வெறும் மஞ்சள்கயிற்றுக் கழுத்தோடு, நிறை மாதப் பெண்ணின் இடுப்பில் வாயில் எச்சில் ஒழுகியபடி, நடப்பது எதுவும் அறியாமல் கால் சூம்பியநிலையில் மாறுகண்ணுடன் இருந்த ஏழுவயதுக் குழந்தையைப் பார்த்தாள்.

“அவங்க பாக்கறதைப் பாத்து அவங்க மேம் கிட்டே சொல்லப் போறாங்களாம். இந்த பஸ் அவங்களுக்காம். அதுல எல்லாரும் ஏறிட்டாங்களாம்“.

“உங்களுக்கு இந்த லேங்வேஜ் எப்படித் தெரியும்?“

“எங்க வீட்ல இந்த மாதிரி சொந்தம் உண்டு“ என்றாள் எங்கோ பார்த்தபடி. . .

“பொய் சொல்கிறாள் என்பது அவள் பார்வையில் தெரிந்தது. கண் எப்படிப் பொய் பேசும்?“

“பயமாயிருக்கும்மா. . . இதுங்க வாழ்க்கையை நெனச்சு!“ என்றாள்.

அதுசரி..நீங்க ஒரு ஆட்டோல போகக்கூடாதா…வயித்துல ஒண்ணு கையில ஒண்ணு……. என்றாள்.

என்னை விடும்மா…வலி வந்தா மரத்துக்கு மறைவுல புள்ளையை பெத்துட்டு அடுத்த நிமிஷமே வேலை பாக்கணும்னு நினைக்கற குடும்பத்துல பிறந்துட்டு… என்வசதியைப்பத்திப் பேசுறிங்களே.. பெண்கள் படிக்கணும்மா—நேர்மையா வாழணும்மா….தான் கற்ற அறிவு பிறருக்குப் பயன்படுற வகையில வாழணும்மா..அடக்கமாகவும் இருக்கணும்மா….இதுங்களுக்குக் கத்துக்கொடுத்த ஆசிரியரைத் தாம்மா தப்பு சொல்லணும்னுட்டு அந்தப் பெண் மடமடவென அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விட்டாள். அவள் வாழ்க்கையில எத்தனை பிரச்சினைகளைப் பாத்தாளோம்மா! நானும் இறங்கிட்டேம்மா. மனசு தாங்கல. . . சீட் எங்கள மாதிரி இருக்கறவங்களுக்குக் கொடுன்னு கேக்கலை. நாங்க வயசானவங்க அனுபவம் இருக்கு. ஆனா இந்தப் பசங்க என்ன செய்யப்போகுதோன்னு தான் பயமாயிருக்கு. . . யாருக்கும் விட்டுக் கொடுக்கணும்னு தோணலைன்னு நினைச்சுத்தாம்மா பஸ் ஸ்டாண்ட்ல நின்னேன். நீ வந்துட்டே. . . ஆனா கடவுள் தான் இந்தப் பார்க்குக்கு வர வச்சதுன்னு நினைக்கறேன். இல்லாட்டா சிவாவைப் பார்த்திருப்பேனா?“ என்றாள் சிவகாமி.

“ஒரு பிள்ளைன்னாலும் அடிச்சுத் திருத்தாட்டியும் அன்பாகவாவது பெற்றோர் திருத்தற சூழல் வரணும்ல…“

மூடிக்கிடக்கிற கருமேகத்தை சூரியன் விலக்கப் பார்த்துத் தோற்றுக் கொண்டிருந்தது. பார்க்கிலிருந்த சூரியகாந்திப் பூக்கள் அப்போது வீசிய மெல்லிய தென்றல் காற்றில் மௌனமாகத் தலை அசைத்து நின்றன.

License

Share This Book