15

அன்று வானம் ஏனோ விடாமல் தூறிக் கொண்டிருந்த்து.

பகல்பொழுதே இரவோ என்னும்அளவு வானம் இருண்டிருந்தது.

இருகால்களையும் ஒட்டி வானத்தைப் பார்த்தபடி சுவரோரமாக உணர்வே இல்லாமல் சாய்ந்து உட்கார்ந்து இருந்த அம்மாவைக் கிரண் லேசாகத் தடவினான். கையில் பிடித்திருந்த பேண்ட்டின் நுனி விட்டால் கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்தில் மறுபடியும் அம்மாவின் தோளைப் பிடித்து உலுக்கினான்.

இலேசாகத் திரும்பிய அம்மாவைச் சைகையால் சாப்பிடுகிறாயா எனக் கையை வாய்க்கு அருகில் கொண்டுபோய்க் கேட்டான்.

வெறித்த பார்வையுடன் இருந்த அம்மா ஒன்றுமே பேசவில்லை.

நான் என்ன செய்வது என்று புரியாமல் வாலைக் குழைத்தபடி கிரணுக்கு அருகில் சுருண்டிருந்தேன். பிளாட்பாரத்தில் இன்று ஆதிக்கம் அதிகம் எனக் கிரண் யாரிடமோ பேசியது எனது காதுகளில் விழுந்தது.அவன் கையில் வைத்திருந்த பன் என் பசியைப்போக்குவதாக இருந்தாலும் ஏனோ அது இன்று என் வயிற்றுக்குத் தேவைப்படவில்லை.

சிலேட்டுபல்பத்துடன் எனது உடம்பின் சூட்டிற்காக என்னை இடித்தபடி அமர்ந்த கிரணின் அரவணைப்பே எனக்குப் போதுமானதாக இருந்தது.

இருந்த ஒரு பன்தான் இன்று கிரணுக்குக் கிடைத்திருக்க்க்கூடும் என்று எனக்குப் புரிந்தது. காலையில் அவன் எடுத்துப்போன பிளாஸ்டிக் குப்பைப்பை காலியாக இருக்கும்போதே நினைத்தேன்.இன்று தேர்தல் மீட்டிங் அல்லவா?குப்பையைச் சுத்தமாக வாரியிருப்பார்கள்.அதுதான் பாவம்…ஏதோ அதில் கிடக்கும் இரும்பு,நோட் அட்டை அதை வச்சே கடைக்குப்போட்டு காசு சேத்து எனக்கும்,அம்மாவுக்கும் ஏதாவது வாங்கும்.

ஸ்கூல்ல சாப்பிடற மதியம் சாப்பாடையும் தூக்கிட்டு பையில வந்து இங்கே கொடுத்துட்டு சாப்புடும். இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே! எனக் கண்களை லேசாக மூடியபடி படுத்திருந்தது கறுப்பி.

என்னடா கிரண்! புத்தகப்பை எங்கே? சட்டையெல்லாம் வேற கிழிஞ்சிருக்குது! குப்பைத்தொட்டிதான் உன் உறவுன்னு ஆகிப்போனதை மாத்தணும்ணுதானடா உன்னை கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கவச்சேன்.ஆனா நீயோ இன்னைக்கு ஸ்கூலுக்கே போகலையாமேடா!

தோளை ஆதரவாகப் பிடித்தபடி கேட்ட கணக்குவாத்தியார் சிதம்பரத்தை அழுதுவிடுபவன்போலப் பார்த்தான் கிரண்.

சார்! நான் யாருக்கும் தொந்தரவா இருக்கக்கூடாதுன்னுதான் ஏதோ இந்தக்கோவிலுக்குப்பக்கத்துல இருக்கற பிளாட்பாரத்துல நானு,எங்கம்மா,கறுப்பின்னு இருக்கோம்.ஆனா அதுகூடப் பொறுக்கலைசார் அந்த தாத்தாவுக்கு!

பாருங்க மழை வர்றமாதிரி இருக்கு..கறுப்பிக்கு மூட வச்சிருந்த பிளாஸ்டிக் பையைக்கூட தாத்தா கிழிச்சுட்டார்.

ஏண்டா! தாத்தா அந்த மாதிரி செஞ்சார்?

பிச்சைக்காரங்களே இல்லாம செய்யப்போறாராம். அதனால எங்களை எங்கேயாவது போகச் சொல்றார்.

நாங்க என்ன பிச்சைக்காரங்களா சார்! உழைச்சுதானேசார் சாப்பிடுறேன்.

பத்து வயதிற்குரிய வேதனை முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்ததைக் கறுப்பி பார்த்துக்கொண்டே இருந்தது.

அன்று கறுப்பி அம்மாவிடம் படுத்து விளையாடிக் கொண்டிருக்கும்போதே குடித்துவிட்டுக்கண்மண் தெரியாமல் தன் தாயைக் கொன்ற கார்க்காரனை நினைத்துப் பார்த்தது.

ஏனோ கிரணைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்போல இருந்தது.

கோடி வீட்டு தாத்தாவிடம் நான் பேசுகிறேன். நீ படுத்துத் தூங்கப்பா! சாப்பிட்டிங்களா மூணு பேரும்…..மழை ரொம்ப வர்ற மாதிரி இருக்கே…..என் வீட்டுக்கு வந்து படுத்துட்டு நாளைக்கு இங்க வரலாம்.இங்க எக்கசக்கமாய் நனையுமே!

பரவாயில்லைசார்.ஒரு பன் இருக்கு…அம்மாவுக்கு இன்னைக்கு என்னன்னு தெரியலை…பசியில்லை போலிருக்கு…..குளிப்பாட்டிவிட்டுட்டு ஆப்பக்காரம்மா போயிருக்காங்க…சோப் வாசனை தெரியுது…….பொட்டுகூட வச்சு விட்டிருக்காங்க…….

மௌனமானார் தாத்தா.

கிரண் வயிற்றில் இருந்த நாள்முதற்கொண்டு பார்க்கின்ற நாடகமாயிற்றே! சிறு பிள்ளையிடம் சொல்லவா முடியும்! தாய்க்கு இருக்கும் அத்தனை உணர்ச்சிகளையும் அந்த கிரணிடம் அவர் பார்த்தார்.

நேற்று நடந்ததுபோல இருந்த நிகழ்ச்சி ஒரு நிமிடம் அவர் கண்ணில் மனதில் ஆடியது.சார்! மிருதுளா அனாதை ஆஸ்ரமப் பொண்ணுசார்! அங்கேயிருந்து கூட்டிட்டுவந்து கல்யாணம் பண்ணிக்கறேன் சார்!எனக்குன்னு ஒரு சின்ன வீடுதான் சார்! வேலை இருக்கு.சாட்சி கையெழுத்து போட வாங்கசார்!

நடந்து முடிந்த கல்யாணத்துக்கு அச்சாரமாய் சார் நான் மிருதுளாவுக்கு வைத்த பொட்டு நல்லாயிருக்கான்னு பாருங்கசார்!எனக் கேட்டுச் சிரித்த கணேஷைக் கண்முன்னே திரும்ப பார்த்தார்.

டு வீலரில்போன அவனுக்கு எமன் குப்பை லாரியிலா வரவேண்டும்? அதுவும் குழந்தை பிறக்குற நேரத்துல என வாயில் அடித்துக்கொண்டு அழுத மிருதுளா அன்று மௌனமானவள்தான்.

குழந்தையைப் படாதபட்டு டாக்டர் கொண்டுவந்ததுமட்டும்தான் தெரியும் அவளுக்கு.

என் புள்ளையே இல்லை….எவ புள்ளை பெத்தா எனக்கென்ன! கை கழுவிய கோடி வீட்டுத் தாத்தாவைக் கரணுக்கு அடையாளமா காட்ட முடியும்! அச்சு அசலாக ஒவ்வொரு நடையிலும் தனது மகனை ஞாபகப்படுத்துகிறானெ என்ற எரிச்சலில் தானப்பா இந்த வேதனை என்பதை அவர் அவனிடம் எப்படி சொல்வார்.

பெண்டாட்டின்னா சமைச்சு மட்டும்தானே போடணும் என்கிற அதட்டலில் அடங்கிய பாட்டியின் முகம் எப்போதாவது சன்னலில் ஆர்வத்துடன் தலை தூக்கும். அந்த தண்ணீர் செம்பு எங்கே? என்ற குரலில் தலை தூக்கிய முகமும் உள்ளடங்கி விடும்.

காரில் போக வேண்டிய பையன் இப்படி குப்பை பொறுக்கி அம்மாவைக் காப்பாற்றுகிறதே! என நினைத்து அவர் வருந்தாத நாளில்லை.

ஒருமுறை தெருவில் உள்ள பெரிய மனிதர்கள் எல்லோரும் சேர்ந்து வீட்டு வாசலுக்குச் சென்று சொன்னபோது அதாரு…..என் வீட்டுப் படையலுக்கு வழி சொல்றது…அதது சோலியைப் பாத்துட்டு போகணும்ல….எடுபட்டுப்போய் குப்பையைக் கொண்டுவந்து வச்சுப் பாக்கணும்னு என மகன் பிரியப்பட்டான்.கடவுளுக்கே தலையில வச்சுக்க பிரியமில்லாமத்தான் அப்படியே எடுத்துட்டுப் போய்ட்டாரு…அந்த மூதேவிக்காக இங்க யாரும் வருவதாக இருந்தால் வரவே வேண்டாம்.

கறுப்பி தெருவோரமாக முன்னங்கால்களிடையில் முகத்தை முட்டுக்கொடுத்தபடி ஒரு கண்ணை மூடியபடி ஓரக்கண்ணால் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது.

நடக்கவிருந்த கோவில் உற்சவத்தின் பெரும்பங்கு டொனேஷன் தாத்தாவுடையது என்பதால் ஊர் சனம் வாயை மூடிக்கொண்டது.

அம்மா யாரென்று தெரியாமல் அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தது அவள் குற்றமா! காதலிக்கக் கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லையே! அப்பாவின் எதிர்ப்பையும் மீறித்தான் அவளைக் கரம் பிடித்தான்.

வாழப் பிடிக்காத கடவுள் கொண்டுபோய் விட்டான் என்று இருந்த வீட்டையும் பிடுங்கி விரட்டிய தாத்தா தான் ஒரிஜினல்தாத்தா என இவனுக்குத் தெரிந்தால்! சிதம்பரம் முயற்சியெடுத்து அவனைப் பள்ளியில் சேர்த்தார்.

ஆப்பக்காரம்மா கொடுத்த சாப்பாடு கைக்குழந்தைக்கும்,கறுப்பிக்கும் போதுமானதாக இருந்தது. சுவரை வெறித்தபடி பார்த்திருக்கும் மிருதுளாவிற்கு கஷ்டப்பட்டு வாயைத் திறந்து ஊட்டிச் செல்லும் ஆப்பக்காரம்மாவிற்குக் கோவில் வைத்துத்தான் கும்பிடவேண்டும்.

ஓரளவு விபரம் ஸ்கூலில் சொல்லித் தெரிந்தபிறகு,

ஒரு நாள் ஆப்பக்காரம்மாவிடம் சென்றான்.

நாளையிலேருந்து சாப்பாடு வேண்டாம்.

ஏன்?ஸ்கூலிலே காலையில் தருகிறார்களா!

இல்லை.பிச்சை போடறமாதிரி நினைக்கிறேன்.

விறகு அடுப்பையே ஒரு கணம் மௌனமாகப் பார்த்தபடி இருந்த ஆப்பக்காரம்மா ஆறுவயது கிரணைச் சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.

என் பேரன் இருந்தா நான் போட மாட்டேனா! என் மக இருந்தா குளிப்பாட்டி வுட மாட்டேனா! என்ன பேச்சு பேசுற நீ இந்த வயசுல!

உங்க காசா இருந்தா பரவாயில்லை.நீங்களே வட்டிக்கு வாங்கி எனக்கு சோறு போடறீங்க……அது தப்பில்லையா?

உழைச்சு கொண்டு வர்றேன்.முடிஞ்சதைப் போடுங்க…ஆறு வயதில் அறிவுக்கு மிஞ்சிய பேச்சைப் பேசும் பையனைப் பார்த்து சரி என்றாள்.ஆமா! உனக்கு இந்த வயசுல யார் வேலை தருவா?

எங்க வளர்ந்தேனோ அதுவே எனக்கு வேலை தரும்.

ட்ட்ட்டாய்ங்! அங்க பாருங்க குப்பைத் தொட்டியை! அதுல பார்த்தீங்களா!எத்தனை புக்! அட்டைப் பொட்டிங்க! பாட்லு….இதெல்லாம் போட்டா கடையில காசு கொடுப்பாங்க…

படிப்பு என்னைக்கும் கைவிடாதுப்பா! படியேன்….

அதுவரைக்கும் என்ன செய்ய…இது போதும் இப்போதைக்கு……..4 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்த தொழிலுக்கு முட்டுக்கட்டை போட்ட தாத்தாவை மனசுக்குள்ளே திட்டித் தீர்த்தான்.

கறுப்பி கிரணை ஓரக்கண்ணால் உற்றுப் பார்த்தபடியே இருந்தது.

யாரோ இலேசாக பூனைபோல நடந்து வரும் சத்தம் கேட்க மல்லிகைப்பூவாசனையில் நிமிர்ந்தான் கிரண். சன்னலில் தாத்தா முகம் கண்டால் உடனே மறைந்துகொள்ளும் ஜீவனாயிற்றே இந்த அம்மா என ஒரு கணம் மலைத்தான். அந்த பாட்டி கையில் என்னவோ இருந்ததை அப்போதுதான் பார்த்தான். ஒரு பெட்டியுடன் கூடிய படுக்கைமெத்தையுடன் இருந்ததைப் பாட்டி தரையில் வைத்தாள். இதை எடுத்துக்கிட்டு எல்லோரும் இங்கேயே படுத்துத் தூங்குங்க! அந்தப் பெட்டியில் நிறைய பிஸ்கட்டும்,பழமும் வச்சிருக்கேன்.எடுத்துக்கோங்க! ஆனா, இங்கிருந்து மட்டும் போய்டாதீங்க யாரும் எனக் கையெடுத்துக் கண்ணீர்வழியக் கும்பிட்டாள். ‘ஏன்! பாட்டி நாங்க போகக்கூடாது என்று சொல்றீங்க‘ என்றான் கிரண். குரல்கூட அப்படியே இருப்பதைப் பாட்டி பெருமூச்சுடன் பாரத்தவண்ணம் என் பையன் அப்படியே உன்னை மாதிரியேதாம்ப்பா இருப்பான்.அவன் இறந்து ரொம்ப வருஷங்களாச்சா! அதான் உன்னை என் பையனாப் பார்க்கறேன்னு சொன்னவளை ஏதோ புரிந்ததுபோல கறுப்பி

வேகமாக வாலை ஆட்டியது.

 

License

Share This Book