16

எனக்குத் தூக்கம் வருகிறது. வீட்டுக்குப் போகலாமா அப்பா? இரு அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் வேலை இருக்கு….முளை விட்டுடுச்சுன்னா ரொம்ப கஷ்டம்..வெளியே மழை பெய்கிறது….குடை வீட்ல மாட்டிக்கிச்சு…..போய் அப்பா தேடினாலும் அம்மா எங்கே வச்சாங்களோ…தேடணும். அப்பா சாக்கை விரிச்சு அதுல ஃப்ளைவுட் பலகை போட்டு வச்சிருக்கேன்.போய்த் தூங்கு…..இல்லைன்னா இந்த கள்ளிப்பெட்டியிலேயே சாஞ்சு தூங்கு…….போறப்ப அப்பா தூக்கிட்டுபோறேன்…….

கரோலினாவிற்கு முழுக்க சேரிலேயே சாஞ்சு குடிசைக்கட்டையில் மாட்டியிருந்த வேலுடைய முருகனைப் பார்த்துக்கொண்டே தூங்கிய நாட்கள் நினைவுக்கு வந்தது. இந்த முருகனுக்குத்தான் இந்தக் கதம்பமாலை எவ்வளவு அழகாக இருக்கு. ஆனா அந்த இடத்துல ஊதுபத்தி வச்சு புகை வந்துடுச்சு……முருகனுக்குச் சுடுமோ…என நினைத்த குழந்தை நாளை மௌனமாக அசைபோட்டாள் கரோலினா.

நேரமில்லைம்மா! அதனால அம்மா இப்படியே பூவை வச்சிருக்கேன். பின்னாடி கண்ணாடியில் திரும்பிப் பாத்துக்கோ! கண்ணுக்கு மை வச்சிருக்கேன். அப்பாட்ட காட்டு! அப்பா நல்லாயிருக்கான்னு சொல்வார். வேகமாக அப்பாவிடம் காட்ட ஓடிய நாளினை எண்ணிப் பார்த்தபடி பேப்பரில் செல்பி ஃபோட்டோ குறித்து ஒபாமா எடுத்த செய்தி வந்திருப்பதை ஒப்பிட்டுப்பார்த்தாள்.

அன்று இந்த வசதி இல்லை என அவள் வருத்தப்படவில்லை. காலக்கடிகாரம் அறிவியலில் சிக்கி வந்துள்ளதை எண்ணி மனதினுள் சிலாகித்தாள்.

அப்பாவைப் பார்த்து 5 மணி நேரம்தான் ஆச்சு………….

மருந்துவாடைமெல்ல எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் ஏசி கதவினை லேசாகத் திறந்து அறிவியல் முன்னேற்றகருவிகளின் உயர்ந்த வயர்களுக்கு நடுவில் பீப்…..பீப்……எனக் கத்தும் பச்சை கிராஃப்கோடுகளைப் பற்றி கவலைப்படாது 8 வருடங்களாக இதே நிலையில் உறக்கநிலையிலேயே இருக்கும் அப்பாவின் தலையை லேசாகப் படித்தாள். வந்துட்டியா……!.

நீ இங்கே இருந்தாத்தான் எனக்கு நல்லாயிருக்கும் எனச் சொன்னது அப்பா இப்போது பேசியதுபோல இருந்தது.

கன்னத்தில் கொசு உட்கார்ந்திருந்ததை லேசாகத் தட்டினாள்.

மாம்பழம்மாதிரிம்மா இவளுக்குக் கன்னம்…….இப்படி தூங்கித்தூங்கி விழுந்தான்னா என்னடா செய்றது…….அப்பா இல்லையேடா….!.இவளை எப்படிடா தூக்கிப்போவது?

உப்புமூட்டை தூக்குவோம்டா!

டேய்! கீழே போட்டுடாதீங்க அவளை! அம்மா எச்சரித்தாள்.பூசணிஅக்காள் தெறிச்சுடுவாள் என அம்மா சிரித்தாள்.

அதெல்லாம் போடமாட்டோம்…..பத்திரமாக வீட்டுக்குக்கொண்டுபோய்டுவோம்.அப்படியே சாப்பிட்டுட்டு வர்றோம்.

ஏண்டா தொந்தரவு செய்றீங்க! இரண்டு பேரும்..நான்தான் தூங்கறேன்ல…தொந்தரவு செய்யாதீங்கடா……

ஏய்! கரோ…அப்பா இல்லை.அடம் பிடிக்காதே….அப்பா மாதிரி என்னால தோள்ல தூக்கிப்போடமுடியாது. உருண்டு விழுந்தா அப்பா பிளாஸ்டர்தான் போடணும். இனிமே …வம்பு பண்ணாதே….உப்புமூட்டை ஏறிக்கோ! கொஞ்சதூரம்தான் அதுவும். அதுக்கப்புறம் நடந்து வருவியாம்.அண்ணன் கதை சொல்வேனாம்.நீ கேட்டுட்டே நடந்து வருவியாம்.அதெல்லாம் முடியாது போடா!

அப்ப என்னைக் குண்டுன்னு சொல்றியாடா!

டேய்அவ ராட்சசிடா……அவகிட்ட தூங்கி வழிஞ்சான்னா பேச முடியாதுன்னு உனக்குத் தெரியாதா! எகனை, முகனையா பேசும்.அப்பத்தா மாதிரி! பேசாம பாதிதூரம் இரண்டுபேருமா இந்த கை பக்கம், அந்த கை பக்கம் போட்டுக் கூட்டிட்டுபோய்டுவோம்..எனப்பேசியதைக்கேட்ட கரோ,கையிலிருந்த காக்கை இறகால் கையைத் தட்டியபடி எழுந்தாள். போட்டானுங்கன்னா என்னாகுறது நம்ம கதி! பேசாம எழுந்திருச்சு நடந்தே போய்டுவோம்.

இவனுங்க சொல்ற கதையைக்கேட்டுட்டு…அதுலயும் அண்ணன் பேய்க்கதை சொன்னான்னா அவ்வளவுதான்! ரொம்ப நல்லாயிருக்கும். வீட்ல பொம்மை பிஸ்கட்வேற அய்யாப்பா வச்சிருப்பார். தின்னுக்கிட்டே தூங்கலாம் என்று விருட்டென எழுந்த நாளை எண்ணி மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.

என்னால் ரொம்பநேரம் உப்புமூட்டை எல்லாம் தூக்க முடியாது. பாதிநேரம் கதை சொல்வேனாம்…கேட்டுக்கிட்டே கீழே போடமாட்டோம் என்று சொன்னசகோதரர்கள் சொன்னதுபோலவே கீழே விழாமலே தாங்கினார்கள் உயிருள்ளவரை..

முதல்முறையாகச் சகோதரர் இருவரும் இறந்த அன்று இந்த முருகன் ரொம்பமோசம்! என வைதது அவளுக்கு ஏனோ நினைவுக்கு வந்தது.படித்ததோ 3ஆம் வகுப்பு. என்ன அறிவு இருக்கும்? அப்போது.இப்போது மாதிரி படித்திருந்தால் அன்று தெரிந்திருக்கும்.நாம் செய்யும் கர்மாதான் நம்மைத் தொடரும் என்று.கல்யாணமான 3ஆவது மாதத்திலேயே ஜூரம் என்று ஹாஸ்பிடல் சென்றவன் ஊசி மாற்றிப் போட்டதால் பிணமாக வந்ததை ஏதோ படுத்திருக்கார்போல! மாத்திரை தூங்கறதுக்கு கொடுத்திருக்காங்கபோல என நினைத்த ஞாபகம் வந்தது. இப்போ எந்திருச்சுருவார் என அவருக்கு வியர்க்கும்..இருங்க! விசிறியால வீசறேன்னு சொன்னதும் அருகில் இருந்த பக்கத்துவீட்டுமாமி மௌனமானாள்.அம்மா வேகமாக உள்ளே சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். அண்ணன் வேகமாகக் கையைப் பிடித்துக்கொண்டு விசிறமுடியாமல் செய்தபோது ஏண்ணா! ஏன் அப்படிச் செய்றே! பாரு அவரு அசந்து தூங்கறாரு! ஒரு பக்க உதடு மட்டும் லேசா விரிஞ்சு புஸ்சுன்னு காத்துவரும்…ஆனா என்னன்னு தெரியலை…..இப்ப வரலை…இந்த மாதிரி இருந்தாருன்னா பத்து நிமிஷத்துல எழுந்திருச்சுவாருன்னு அர்த்தம் எனக் கண்ணை விரித்துப் பேசிய தங்கையை என்னசெய்வதென்று தெரியாமல் விழித்துப்பார்த்த அண்ணன் நெஞ்சைப் பிடித்து விழுந்ததும், தான் மயக்கமாகி இருந்ததும் ஞாபகத்திற்கு வந்தது.

விித்துப்பார்த்ததும் வீடு நிறைய ஆட்கள் வருவதும்போவதுமாக இருந்ததையும்,தான் அப்பா வீட்டில் படுத்திருப்பதையும் பார்த்தாள்.மெல்ல நினைவுபடுத்திப்பார்த்தாள். அண்ணனுக்கு என்னாயிற்று! நாம பாட்டுக்கு மயக்கமாயிட்டோம். படுத்தா உடனே எழுந்திருக்கிற பழக்கமே இல்லை எனத் திட்டும் அப்பா அன்று ஏன் வந்து என்னை எழுப்பவில்லை.எங்கு சென்றார்் என் கணவர்? கொல்லைப்பக்கம் இருக்கும் ஜாதி மல்லி பூத்த வாசம்இங்குவரை மணக்கிறது…அம்மாவும் பறிக்கவில்லையா! என எழுந்துகொள்ளமுயன்றாள்.

நீ ஒண்ணும் எழுந்துக்கவேணாம்…படுத்துக்கோ….உ.டம்பு பத்துநாளா அனலா கொதிச்சுது…..இப்பதான் தன்நினைவுக்கு வந்திருக்கிறாய்… இட்லி இருக்கு! பல்லைத் தேய்ச்சுட்டு சாப்பிடு…….உடம்பை வெந்நீர் வச்சுத் துடைக்க ஏற்பாடு செய்கிறேன்.

எங்கேம்மா அண்ணன் இரண்டுபேரும்…ஆளே காணோம்…இவரும் இல்லை..உடம்பு ஜூரம் விட்டுடுச்சா அவருக்கு…பாருங்க எல்லாருக்கும் ஜூரம் வருது………

எல்லோரும் வயலுக்கு உரம் வாங்கணுமாம்.அது கொல்லைத்தொலைவுல இருக்குல்ல….அதான் வர நேரமாகும்னு சொல்லிட்டுப்போனாங்க..அப்பா மட்டும் இருக்கார்.இதோ! அப்பாவே வந்துட்டாரே…எனச் சொல்லிவிட்டு எதையோ மறைத்துப்பேசுவதுபோல கரோலினாவுக்கு அப்போது தோன்றியது.

அப்பா உங்களை ஒரு கை பிடிச்சு நடக்கட்டுமாப்பா! கீழே விழுந்துடுவேனோன்னு பயமாயிருக்கு! நீ விழ மாட்டேம்மா அப்பா இருக்கறவரைக்கும்! எனக்கூறிச் சிரித்தார்.

அப்பா கொடுத்த கையை இன்று சுருங்கி சிறிதாகி ஊசியால் குத்தி இரணமாகி பிளாஸ்டரின் நடுவில் இருந்ததைப் பார்த்தாள்.

அம்மா பறிக்காமல் விட்டிருந்த ஜாதிமல்லிகையைப் பறிக்கச் சென்றபோது பக்கத்துவீட்டுப்பாட்டி வெள்ளைச்சேலையுடன் வேகமாகவந்து அதுதான் அவனை முழுங்கிட்டியே! நீயும் நானும்தான் ஒண்ணாயிட்டோமே! இப்ப எதுக்குடி உனக்கு இந்த பூ ஆசை எல்லாம். பூவே அவனுக்காகத்தானடி! அவனே இலலையேடி! பத்தும் பத்தாததுக்கு உன்னுடைய அண்ணன்மாருகளும் சேர்ந்துல்ல போய்ட்டானுங்க… இதுக்குத்தான் உங்கப்பனை அன்னைக்கே சொன்னேன். பொண்ணைப் படிக்கவைச்சு மேஜராக வந்தபிறகு கல்யாணம் செய்யுன்னு கேட்டானா! ஜாதகம் அமோகமா இருக்குன்னு முடிச்சுட்டான் பதினைஞ்சு வயசுல…என்ன குரு தசையோ! என்ன கண்றாவியோ! போ! என்னைமாதிரி நீயும் மூலைல உட்கார்ந்து உருத்ராட்சத்தை உருட்டிக்கிட்டு

இரு! எனக் கோபத்துடன் வந்து வீசிய வார்த்தைகளின் அமில நிஜத்தை அப்போதுதான் உணர்ந்தாள் கரோ. பூ பறிக்க வைத்த பந்தலிலிருந்து கையை எடுக்க நினைத்த அவளின் கையை அப்பா பிடித்தார் வேகமாக. நீ பறிச்சுக்கோ! கூடவே பக்கத்துல துளசியும் இருக்குபாரு! சேர்த்துக்கட்டு! சாமிக்கும்போட்டு உனக்கும் வேணும்னா தலையில வச்சுக்கோ! உலகத்துல மனசு சந்தோஷம்ங்கறது அவங்க மனசைப்பொறுத்தது.அடுத்தவங்களுக்குத் தீமை தராததா இருந்தா அது போதும். துளசி கதையே கற்புக்கரசி கதைதானே தவிர பெண் பூ வச்சுக்கக்கூடாதுன்னு சொல்ல்லையே! இதைக் கேட்டதும் முகத்தைச் சுழித்தாள் பாட்டி.

உங்கப்பனுக்கு ஒரே நேரத்துல 3 சாவைப் பாத்தான்ல.அதுல மூளை குழம்பிப்போச்சு……சொல்லியபடி.கதவை பட்டென்று அடித்துச் சார்த்தியபடி உள்ளே சென்றாள் பக்கத்துவீட்டுப்பாட்டி. உலகத்தை யாரோ தலைகீழாகச் சுற்றியதுபோல மறுபடியும் கிர்ரென வரவே, பந்தலைப் பிடித்துச் சமாளித்தாள் கரோலினா. லோகத்துல இன்னும் என்னவெல்லாம் பாக்கியிருக்கோ….இதெல்லாம் பார்க்கணும்னு தலையில எழுதியிருக்கோ அதுதானே நடக்கும்.அதைவிட்டுட்டு பகவானுக்குத் துளசி மாலை போடச்சொல்ற அப்பனை என்ன செய்றது…தோஷம் வந்துடுமே…..கோடியாத்துமாமாகிட்டசொல்லி இவாளை முதல்ல ஊரைவிட்டே ஓட வைக்கணும்.. பதினைஞ்சு வயசுல கல்யாணம் செஞ்சது தப்பு. படிக்கவைக்காதது அதைவிட தப்பு… இப்பபார் செய்யுற வேலையை….!

சும்மா கத்தாதேம்மா…..எந்தக்காலத்துல இருக்க நீ? அது படாதபாடுபட்டு பத்துநாள் கழிச்சு புது ஜனனம் எடுத்து முழிச்சுப்பார்த்து வந்துருக்கு…அதுகிட்டேபோய் உன் வெள்ளைப்புடவை,மடின்னு உபன்யாசம் செய்யாதே. தெருவுல இருக்கற பெரியவங்க எல்லாரும் சேர்ந்துதான் இந்தப் பொண்ணுக்கு அப்படி ஒரு முடிவை நாங்க கொடுத்திருக்கோம். ஏன்னா உன்னை நான் பார்க்கறேன்மா…அத்தையை நான் பார்த்திருக்கேம்மா! என்னால முடியாதும்மா இனியும்……..! கத்திய வெள்ளைப்புடவை பாட்டி அடங்கினாள். அவா வேற ஜாதிம்மா.. இருந்தாலும் பெண்களுக்கு கிட்டதட்ட ஒரே நியாயத்தைத்தான் தர்றீங்க பொம்பளைங்களாச் சேர்ந்து…!ஆம்பளைங்க நாங்க இல்லை இதுல…இது மாறணும்…..பேசிய சாம்புமாமாவை சன்னல் வழியாக வெட்கத்துடன் பார்த்து பயந்து உள்ளே ஓடினாள். கரோலினா.அப்பாவிடமும்,அம்மாவிடமும் பாடங்கள் நிறைய படித்தாள்.மேற்கொண்டு என்ன படிக்கவேண்டுமோ அதையெல்லாம் முடித்தாள்.

கணவன் இறந்தபின்தான் உலகத்தில் உள்ள பல சூட்சுமங்கள் மெல்ல அவள் மனதில் உரைத்தது. தான் மயக்கம் போட்டு விழுந்ததுமுதல் ஹார்ட்அட்டாக் என அண்ணனும், கூடவே தோட்டத்திற்குச் சென்ற மற்றொரு அண்ணனைப் பாம்பு தீண்டி இறந்ததையும் பக்கத்துவீட்டு மாமாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். கல்யாணம் பண்ணிக்கிறியா அம்மா மறுபடி என அப்பா கேட்டபோது ஒருவனுக்கு ஒருத்திதாம்ப்பா! போதும். எங்காவது குழந்தை கிடைச்சா சொல்லுங்க! வளர்த்துக்கறேன். பேச்சுத்துணைக்கு ஆள் வேணும்ல….வருடங்கள் தத்தெடுக்காமலேயே ஏனோ சென்றுவிட்டது.

ஏதோ அப்பா கொடுத்த தைரியத்தில் படித்து ஒரு வேலை வாங்கி ஒரு ஆஃபிசில் கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருந்து முதல்மாத சம்பளத்தைப் பார்த்த சந்தோஷத்தில் கடமை முடிந்தது என உயிரை விட்ட அம்மாவை மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். அப்பாவிடம் உங்களது ஆசை என்ன அப்பா என்று பலமுறை கேட்டிருக்கிறாள்.அப்பா நேரம் வரும்போது சொல்கிறேன் என வயக்காட்டுக்குச் சென்றுவிடுவார். இத்தனைவருடங்களாகியும் மாறாத அப்பா ஒவ்வொரு காய்,பழம் பழுத்தபோதெல்லாம் உற்றுப்பார்த்துப் பல மணிநேரங்களுக்குப்பின்தான் அனுப்புவார். இறந்த பிள்ளைகளாக நினைப்பாரோ என கரோ நினைத்ததுண்டு. ஆனால், சமீபகாலமாக அவர்முகத்தில் ஏனோ சிரிப்பே இல்லாதிருந்ததைக் கவனித்தாள். ஈசிசேரில் சாய்ந்திருந்த அவரை, அப்பா என மெல்லக் கூப்பிட்டாள். தலை முழுதும் நரை இருந்ததைக் கவனித்த அப்பா ஏம்மா! இப்போல்லாம் டை நிறைய வந்துருச்சே! கெமிகல் இல்லைன்னு வேற சொல்றாங்களே! போடறதில்லையா நீ! காய்,பழம் இதுக்கெல்லாம்கூட சத்துபோட நிறைய மார்க்கெட்டுல வந்துருச்சாம்.ஃபாரீன்லருந்து வருதாம்மா! அந்து சொன்னான். அதுலவர்ற வியாதியையும் சேர்த்து…..மௌனமாக அப்பா இருந்ததற்கான காரணத்தை அப்போதுதான் கண்டுபிடித்தாள் கரோ.

நான் பலமுறை இதுபத்தி நம்ம ஊர்ல பேசியிருக்கேன்.எல்லாருக்கும் விளைஞ்சதுக்கும், வேலை செஞ்சதுக்கும் ஒண்ணுமில்லையான்னு கோபப்பட்டு இடத்தை ஃப்ளாட்போட்டு வித்துட்டுபோய்டணும்ணு பேசுறாங்க..தண்ணியில்லை…ஒண்ணுமில்லை…பக்கத்துல இருக்கற ஆத்துல எடுத்தா நீ வேற ஊரு……ஜாதி…அது இதுன்னு பேசுறான்….ஏன் உங்களுக்குன்னு என்னையே திருப்பறானுங்க……நீ என்னம்மா சொல்ற……?முதல்முறையாக வாழ்க்கையில் சொத்துகுறித்து அப்பா தன்னிடம் பேசியதை நினைத்துச் சந்தோஷப்பட்ட கரோ எனக்கு ஏம்ப்பா இந்தப் பெயர் வச்சீங்க! நான் எங்க வச்சேன்?

நானும்,அம்மாவும் 5 பெயர் செலக்ட் செஞ்சோம்.அதுல உனக்குப் பிடிச்சதை நீ வச்சுக்கிட்டே!பெயர்கூட என் இஷ்டம் 5 கொடுத்ததுதான். ஆனா தேர்ந்தெடுத்தது எல்லாம் நீதான். அதுதான் எனக்குப் பிடிச்ச பெயர். அம்மாகூட இதுபற்றி ரொம்பப்பெருமையாய்த்தான் பேசுவா!இது என்னோட படிச்ச பொண்ணு பெயரு.அந்த பொண்ணு நான் சாப்பிடாம பாதிநாள் இருந்தப்ப தன்னோட டிஃபன்பாக்சைத் தரும். வயக்காட்டுல இருந்துட்டு 3 கிலோமீட்டர் நடந்துட்டுபோய்த்தான் பள்ளிக்கூடத்துல படிச்சேன். சமயத்துல ஆத்துல லேசா வெள்ளம் வரும்.இடுப்பு உசரத்துக்கும்மேல. இப்பகூட எனக்குப்பிறகு நீதான் இருக்கப்போறே! டிரஸ் நனைஞ்சா ஸ்கூல்ல தரையில உட்கார்ந்து பாடம் படிக்கமுடியாதுல்ல! டிரஸ்செல்லாம் அப்படியே தலையில வைச்சு,பையை வச்சுக்கிட்டு போய்ச்சேருவோம்.என்னத்தைச்சொல்ல! அன்னைக்கு இருந்தமாதிரிதான் இன்னைக்கும் கிராமங்கள்ல பள்ளி இருக்கு…எந்த முன்னேற்றமும் தெரியலை…அன்னைக்கு என் வயிற்றை நிறைச்ச அன்னபூரணியாத்தான்மா அவ எனக்குத் தெரிஞ்சா! சிலுவைபோட்ட அவ மதம் எனக்குத் தெரியலைம்மா! அன்னைக்குத் தெருவுல உன்னைப் படின்னு ஊக்கப்படுத்திய அப்துல்காதரும், செருப்பு தைச்சுக்கிட்டு உனக்கு புக் வாங்கிக்கொடுத்தான்பாரு முனியாண்டியும்! வாய்க்கால் தள்ளி உடம்பெல்லாம் மலத்தைப்பூசி எழுந்து கழுவிட்டு சாமியைக்கும்பிட்டு உம்பொண்ணு நல்லாவருவான்னு சொல்லி அவங்கொடுத்த பேனாதாம்மா இப்போ நீ பிடிக்கிறது……நீயும் அதேமாதிரி எந்த இடத்துலேயும், எந்த நாட்டிலேயும் பிரிவினை பேசக்கூடாது சரியாம்மா! இன்னைக்கென்னடான்னா பசங்க பொம்பளைப்பசங்களை விதவிதமாப் படமெடுத்து வருதுங்கன்னு நியூசா வருது….காரணம் என்ன தெரியுமா! அதுங்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை…சொன்னா கேட்பாங்க…ஆனா சொல்ல சுயநலமில்லாத ஆசிரியருங்க வேணுமுல்ல………. அப்பா இருக்கும்வரை தன்னை உயிருடன்இருக்கச்செய்யுமாறு அடிக்கடி முருகனிடம் வேண்டிய அவள் சரி! எங்கோ பேசி தலைப்பு எங்கோ செல்லுது……! இடத்தை என்ன செய்யலாம்? கேட்டிங்கள்ல……….வானம் பார்த்த பூமிதானே! கிணத்துலயும் தண்ணியில்ல….இப்போதைக்கு வைங்க…ஆஃபிசில் நல்ல மனிதர் ஒருவர் இருக்கார். கேட்போம்.எனக்கூறிச் சென்றாள்.ஆனால் அன்று மாலையே குளிக்கறதுக்குச் சென்றவர் பக்கவாதம் வந்து விழுந்து இதோ! கோமாஸ்டேஜ் வருடக்கணக்காய். தன்னைப் பற்றி யாராவது எழுத மாட்டார்களா என மனிதர்கள் பலபேர் நினைக்கிறார்கள்.ஆனால், என்கூட இருந்தவர்கள் எல்லோருமே பலன் கருதாமல் சத்தமில்லாமல் என்னை ஏற்றி விட்டிருக்கிறார்கள் என்பதை மனப்பூர்வமாகக் கரோ உணர்ந்தாள்.

நடைமுறை உலகிற்குத் திரும்பி அப்பாவின் தலையில் கைவைத்தவள் உங்கள் ஆசைப்படியே அந்த இடத்தை ஒரு படித்த ஏழை விவசாயிக்குக் கொடுத்துவிட்டேனப்பா! எனக்கு நிலத்தைவிட உங்கஆசைதான் முக்கியம்னு நீங்க எழுதி வைத்த டைரிதாம்ப்பா எனக்குச் சொன்னது என தனது கையின் மென்மையான அழுத்தத்தை அப்பாவின் நெற்றியில் அழுத்தினாள். அப்பாவின் நெற்றி அந்த சூட்டை இனங்கண்டு லேசாகச் சிலிர்த்ததை அவள் உணர்ந்து புன்னகைத்தாள்.

License

Share This Book